இன்னும் எத்தனை பேர்களை இழக்க போகிறோம்: ப.சிதம்பரம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக தீவிரவாதிகளின் வன்முறைக்கு அப்பாவி மக்களும் பிரமுகர்களும் கொல்லப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் `ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சுஜாத் புஹாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
பத்திரிகையாளர் புஹாரி மட்டுமின்றி அவரது இரண்டு பாதுகாவலர்களும் சுடப்பட்டு அவர்களும் மரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டியவர்கள் கடமை தவறியதன் விளைவு பத்திரிகையாளர் சுஜாத் புஹாரியின் படுகொலை. இன்னும் எத்தனை ஜவான்களையும், சாதாரண குடிமக்களையும் இழக்கப்போகிறோம்? என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் பத்திரிகையாளர் சுஜாத் புகாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் பத்திரிகையாளர் சுஜாத் புகாரி கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை தலைவர் எஸ்.பி.பனி தெரிவித்துள்ளார்.