1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (14:36 IST)

கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு!!

வட மாநிலங்களில் ஏற்பட்ட அதீத மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் அனைத்து உணவுகளுக்கும் முக்கிய வஸ்துவாக விளங்குவது வெங்காயம். வட மாநிலங்களில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் நாடு முழுவதும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வட மாநிலங்களில் மழைப்பொழிவு மற்றும் வெள்ள பெருக்கின் காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சேமித்து வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளும் வெள்ளத்தால் அழுகி போய்விட்டன. இதனால் தேசிய அளவில் வெங்காயத்தில் விலை உயர தொடங்கியிருக்கிறது.

மஹாராஷ்டிராவில் உள்ள நாசிக் சந்தையிலிருந்துதான் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் வெங்காயம் குவிண்டாலுக்கு 1000 ரூபாய் விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒவ்வொரு நாளும் 15 குவிண்டால்கள் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது வெறும் 10 குவிண்டால்கள் மற்றுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தேசிய அளவில் வெங்காய பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது கிலோ 50 ரூபாய் விற்று வரும் பெரிய பல்லாரி வெங்காயம் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. முன்பெல்லாம் வெங்காயம் நறுக்கும்போதுதான் கண்ணீர் வரும். இப்போதெல்லாம் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் போல!