செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2016 (13:21 IST)

பழைய 500 நோட்டுகள் நாளை வரை மட்டுமே செல்லும் - பொதுமக்கள் அதிர்ச்சி

பொதுமக்கள் தங்கள் கையில் வைத்துள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பவர் 8ம் தேதி இரவு அறிவித்தார்.


 

 
மேலும், மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வாங்கிகளில் செலுத்தி, மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால்  வங்கிகளில் புதிய 2000 ரூபாய் மட்டுமே வினியோக்கிக்கப்படுகிறது. 500 ரூபாய் நோட்டு கொடுக்கப்படவில்லை. 
 
எனவே, பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் பங்க், மின் கட்டணம் செலுத்த, மருத்துவமனை, மருந்தகம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற காரணங்களுக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், திடீரென பெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதேபோல், விமான டிக்கெட்டுகள் வாங்குவதற்கும் நாளை வரை மட்டுமே 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் இருந்து தங்களுக்கு தேவையான பணத்தை பொதுமக்கள் எடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால், டிசம்பர் 30ம் தேதி என்ற கெடுவை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை வலுத்து வருகிறது.
 
இந்நிலையில், பெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே 500 ரூபாய் செல்லும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ரூபாய் நோட்டு விவகாரத்தில், ஒவ்வொரு நாளும், நிலையில்லாத, அதிரடியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு வருவது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.