வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 14 ஜூன் 2015 (15:44 IST)

ரூ.1,500 கோடியில் அணு உலை விபத்து இழப்பீடுக்கான காப்பீட்டு திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

அணு உலை விபத்து இழப்பீடுக்காக ரூ.1,500 கோடி காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.


 

 
பல்வேறு நாடுகளுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி, அந்த நாடுகள், இந்தியாவில் அணு உலை அமைப்பதற்கு தேவையான சாதனங்களையும், அணு மின்சாரம் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை அனுப்பி வருகின்றன.
 
இந்நிலையில், ஒப்பந்தத்தின்படி அமைக்கப்படும் அணு உலைகளில், விபத்து நேரிட்டால், அதற்கான இழப்பீடு கோரி, அணு உலை சாதனங்களை அனுப்பிய வெளிநாட்டு நிறுவனங்கள் மீது இந்தியா வழக்கு தொடர உரிமை உள்ளது.
 
அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தின் கீழ், இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனால், அணு உலை சாதனங்களை வழுங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவுக்கு சாதனங்களை வழங்க தயங்கின.
 
விபத்து ஏற்பட்டால், தங்களது நிதிச்சுமையை ஈடு செய்வதற்காக, காப்பீட்டு திட்டத்தை அமைக்குமாறு இந்தியாவை வற்புறுத்திவந்தன. இந்த திட்டம் அமைக்கப்படாததால், கோரக்பூர் அணு மின்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.
 
இந்நிலையில், இந்தப் ப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, ரூ.1,500 கோடிக்கான இந்திய அணு உலை காப்பீட்டு தொகுப்பு திட்டம் தொடங்கப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களின் நிதிச்சுமையை ஈடுகட்டுவதற்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய பொது காப்பீட்டு கழகம் மற்றும் பொதுத்துறை, தனியார் துறையைச் சேர்ந்த 11 காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தை தொடங்கியுள்ளன. இதை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் டெல்லியில் அறிவித்தார். 
 
இது குறித்து   ஜிதேந்திர சிங்  கூறியதாவது:- 
 
இந்த காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டதால், முடங்கிக் கிடந்த கோரக்பூர் உள்ளிட்ட திட்டங்கள் புத்துயிர் பெறும். இதன் காரணமாக, அடுத்த 5 ஆண்டுகளில் அணு மின் உற்பத்தியை மூன்று மடங்கு உயர்த்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவு நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.