புனேவில் நாளை முதல் 7 நாட்கள் ஓட்டல்கள், பார்கள் மூட உத்தரவு
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நாளை முதல் ஹோட்டல்கள் உணவகங்கள் மற்றும் பார்கள் மூடப்படும் என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று புனே. இந்நகரத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது. இதனையடுத்து இன்று சுகாதார அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி புனே நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு நாளை முதல் பிறப்பிக்கப்படுகிறது
அதுமட்டுமின்றி பகல் நேரத்திலும் உணவகங்கள் பார்கள் ஓட்டல்கள் திறக்கக்கூடாது என்றும் பார்சலுக்கு மட்டும் அனுமதி உண்டு என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இரவுநேர ஊரடங்கின்போது பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் மீறி வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இரவு நேர ஊரடங்கு என்பது மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேரம் இருக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திருமணங்கள் மற்றும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கிடையாது என்றும் திருமணத்தில் 50 பேர்களும், இறுதி சடங்கில் 20 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. புனே நகரின் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது