1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (16:06 IST)

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

Train
பல்வேறு குடும்பப் பெயர்களை கொண்டவர்களுக்கு ஒரே ஐடி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.
 
ஒருவரது ஐஆர்சிடிசி ஐடியில் இருந்து மற்றவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால், சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்லது ஒரு குடும்பப் பெயர்களை கொண்டவர்கள் ஒரே ஐஆர்சிடிசி ஐடி மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் உள்ளிட்ட விதிகளை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
 
இந்நிலையில், அந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானது மற்றும் தவறாக வழிநடத்தும் விதமாக வெளியிடப்பட்டு உள்ளதாகவும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐஆர்சிடிசி தனது எக்ஸ் பக்கத்தில், இ-டிக்கெட் புக்கிங் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என கூறப்பட்டுள்ளது.
 
பல்வேறு குடும்பப் பெயர்களை கொண்டவர்கள் ஒரே ஐஆர்சிடிசி ஐடியில் இ-டிக்கெட் புக்கிங் செய்ய முடியாது என வெளியான செய்தி போலியானது என்றும் ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற தவறான செய்திகளை பரப்புவதை சம்பந்தப்பட்டவர்கள் தடுக்க வேண்டும் என்றும், ரயில்வே வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப ஐஆர்சிடிசியில் ரயில் டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்படும் என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
யாரேனும் தங்களது ஐஆர்சிடிசி ஐடி மூலம் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் புக்கிங் செய்ய முடியும் என்றும் ஐஆர்சிடிசி ஐடியுடன் ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில் ஒருவர் மாதம் 12 டிக்கெட்டுகளும், ஆதார் இணைத்தால் 24 டிக்கெட்டுகள் வரையும் புக்கிங் செய்து கொள்ள முடியும் என்றும் ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.