வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 28 அக்டோபர் 2015 (16:27 IST)

மீண்டும் வருகிறது மேகி : 3 ஆலைகளில் உற்பத்தியை தொடங்கியது நெஸ்லே

மேகி நூடுல்ஸ் உற்பத்தியை 3 மாநிலங்களில் உள்ள ஆலைகளில் தொடங்கியிருப்பதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

 
நெஸ்லே நிறுவனத்தின் புகழ் பெற்ற தயாரிப்பு மேகி நூடுல்ஸ். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி வாங்கி உண்டு வந்தனர். ஆனால், இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு காரியம் கலந்திருப்பதாக கடந்த ஜூன் மாதம் பரபரப்பு புகார் எழுந்தது.
 
இதனையடுத்து, இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மேகிநூடுல்ஸ் விற்பனைக்கு அதிரடியாக தடை விதித்தன. இதனால் 30,000 டன்கள் எடையிலான மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சந்தைகளில் இருந்து நெஸ்லே இந்தியா நிறுவனம் திரும்பப் பெற்றது.
 
இந்த நிலையில், இந்த தடைக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் நெஸ்லே நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மேகியின் தரம் குறித்து சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதனால், மேகி நூடுல்ஸ் மீது 6 விதமான 90 மாதிரிகள்  ஆய்வகங்களில் பரிசோதனை செய்தனர். இதில் குறிப்பிட்ட அளவை விட அளவு குறைவாக மேகி நூடுல்ஸில் காரியம் கலந்திருப்பது தெரிய வந்தது. இதனால், குஜராத் மாநில அரசு, மேகி நூடுல்ஸ் மீதான தடையை அதிரடியாக நீக்கியது.
 
இந்நிலையில், மேகி நூடுல்ஸ் உற்பத்தியை 3 மாநிலங்களில் உள்ள ஆலைகளில் தொடங்கியிருப்பதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது
 
மேலும், பிற மாநில ஆலைகளிலும் உற்பத்தியை தொடங்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் இத்தகவல்களை நெஸ்லே தெரிவித்துள்ளது.
 
3 ஆலைகளில் உற்பத்தியான நூடுல்ஸ்கள் அரசு அங்கீகரித்த 3 ஆய்வகங்களில் மீண்டும் சோதிக்கப்படும் என்றும் உரிய அமைப்புகளிடம் இருந்து அனுமதி கிடைத்த பின்னரே அது விற்பனைக்காக சந்தைகளுக்கு அனுப்பப்படும் என்றும் நெஸ்லே உறுதியளித்துள்ளது.
 
இதைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி புதிதாக தயாரிக்கப்பட்ட மேகி நூடுல்ஸ்கள் 3 ஆய்வகங்களில் சோதிக்கப்பட்டன. உரிய அனுமதி கிடைத்ததை அடுத்து, அதிகளவில் உற்பத்தி தொடங்கப்பட்டு மீண்டும் ஒரு முறை சோதிக்கப்பட இருக்கிறது.