திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 19 ஜூன் 2024 (13:17 IST)

நீட் தேர்வு முறைகேடு.! ஜூன் 21-ல் நாடு தழுவிய போராட்டம்..! காங்கிரஸ் அறிவிப்பு...!!

Congress Protest
நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜூன் 21-ந் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
 
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு, இந்த ஆண்டு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. 
 
தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். அந்த வகையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.  
 
மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகி இருந்தது. 
 
நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை ஆனதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் என நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.  இந்த முறைகேடு சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜூன் 21-ந் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.