இதுக்குதான் அப்பவே பயந்தோம்..! குப்பைகளில் தேசிய கொடி! – சமூக ஆர்வலர்கள் வேதனை!
சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக வழங்கப்பட்ட தேசிய கொடிகள் குப்பைகளில் கிடப்பது வேதனை அளிப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் பிரதமர் மோடி, 75வது சுதந்திர தினத்தில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கேற்றார்போல பல கட்சிகள், தன்னார்வல அமைப்புகள் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை வழங்கின. தபால் நிலையங்கள் மூலமாக தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டது. சுதந்திர தினத்திற்காக ரூ.500 கோடி ரூபாய்க்கு 30 கோடி தேசியக் கொடிகள் விற்பனையானதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் சுதந்திர தினம் முடிந்த பிறகு தேசிய கொடியை என்ன செய்வதென்று மக்களுக்கு சரியான வழிகாட்டு முறைகள் வழங்கப்படவில்லை. இதனால் பல பகுதிகளில் மக்கள் தேசிய கொடிகளை குப்பையில் வீசிய அவலம் நிகழ்ந்துள்ளது. அதுபோல மேலும் சில மக்கள் அறியாமையால் தேசிய கொடியை இன்ன பிற வேலைகளுக்கும் பயன்படுத்துவதாக தெரிகிறது.
இதை நினைத்து முன்பிருந்தே தாங்கள் பயந்து வந்ததாக சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். தேசியக்கொடி குறித்த முறையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு அளித்து அவற்றை பொதுவெளியில் வீசாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.