வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (20:12 IST)

நேபாள மக்களின் மனத்தை மோடி வென்றார் - நேபாளக் குடியரசுத் தலைவர் புகழாரம்

நேபாளக் குடியரசுத் தலைவர் டாக்டர் ராம் பரன் யாதவ் (Ram Baran Yadav), 2014 ஆகஸ்டு 04 அன்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். இரண்டு நாள் நேபாளப் பயணத்தின் போது, மக்களின் மனத்தை வென்றதற்காக நேபாளக் குடியரசுத் தலைவர், மோடியை வாழ்த்தினார்.
 
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் அண்டை நாடுகள் புது நம்பிக்கை கொண்டுள்ளதாக நேபாளக் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். இந்தியாவில் மட்டும் அல்லாது சார்க் மண்டலங்களிலும் வளர்ச்சி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
 
மேலும் குடியரசுத் தலைவர் தெரிவித்ததாவது:
 
நேபாள நாடாளுமன்றத்திலும், நேபாளப் பிரதம மந்திரி சுஷில் கொய்ராலா அளித்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடியின் உரை மிகச் சிறப்பாக இருந்தது. இந்த உரை, இந்தியாவுக்கும் நேபாள நாட்டுக்கும் இடையேயான நட்புறவில் புதிய யுகத்தை எடுத்துக் காட்டுகிறது. 
 
நேபாளப் பயணத்தின் மூலம் நேபாள மக்களின் மனத்தைப் பிரதமர் நரேந்திர மோடி வென்றுள்ளார். இவரது வரவால் நேபாளத்தில் வளர்ச்சிக்கான புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக, இந்தியா உதவி புரியும் என்ற நம்பிக்கை நேபாள அரசுக்கு உள்ளது. 
 
குடியரசு நாடான நேபாளம், தனது சொந்த அரசியல் சட்டத்தை எழுதி வருகிறது. 
 
இவ்வாறு நேபாளக் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். 
 
கடந்த இரு நாட்களாக நேபாள மக்கள் தந்த அன்பினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நேபாளத்தின் ஆட்சி முறையை இந்தியா மதிக்கிறது. இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவ, இந்தியா ஆர்வமாக இருக்கிறது. இந்தியா கூட்டாட்சி ஜனநாயக முறையைக் கொண்டுள்ளது. அது போல், நேபாளமும் இதைப் பின்பற்ற உள்ளது. நேபாளத்தின் அரசியல் சட்ட அமைப்பு, வன்முறை இல்லாமல் அமைதியாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் முன்னேறுவதைக் குறித்து ஒரு புதிய செய்தியை உலகிற்கு அனுப்ப உள்ளது. என்னுடைய பயணத்தின் போது, நேபாள மக்கள் காட்டிய அன்பிற்கு எனது நன்றி. 
 
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
 
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய குழுவினருக்கும் நேபாளக் குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ் விருந்து அளித்தார்.