செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: சனி, 2 ஆகஸ்ட் 2014 (12:54 IST)

நரேந்திர மோடி - ஜான் கெர்ரி பேச்சு வார்த்தை விவரங்கள்

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கச் செயலர் ஜான் கெர்ரி மற்றும் வர்த்தகப் பிரிவுச் செயலர் பென்னி பிரிட்ஸ்கர், புது தில்லியில் 2014 ஆகஸ்ட் 01 அன்று சந்தித்துப் பேசினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு அமெரிக்கச் செயலர்களும் இந்தியா - அமெரிக்கா இடையே செயல்படுத்த வேண்டிய உத்தேச திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். 

 
இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு முன் உரிமை அளிக்க, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கருத்தைத் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, உலக அளவிலான பங்கேற்பு ஆகியவை குறித்தும் இவர்கள் பிரதமருக்குத் தெரிவித்தனர். 2014 செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடைபெற உள்ள மாநாட்டில், புதிய உறவை ஏற்படுத்தும் வகையில் புதிய கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும். இது அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று ஒபாமாவின் விருப்பத்தைப் பிரதமரிடம் தெரிவித்தனர்.
 
இரு நாடுகளுக்கு இடையே கருத்துகளும் ஆர்வங்களும் மிகப் பெரிய அளவில் இருப்பதாகப் பிரதமர், அமெரிக்கச் செயலர்களிடம் தெரிவித்தார். உலக அளவில், இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து உலக அளவில் உள்ள சவால்களைச் சந்திக்கவும், அமைதியை மேம்படுத்தவும், இந்தியாவின் பொருளாதார மாற்றங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் இணைந்து செயல்படுவதே இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையாகும்.

 
வர்த்தகம், முதலீடு, தூய்மையான எரிசக்தி, புதிய கண்டுபிடிப்புகள், கல்வி, தொழில் மேம்பாடு, வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல், இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற துறைகளில் வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் இந்த நல்லுறவு அமைய வேண்டும். 
 
வளர்ந்து வரும் நாடுகளில், வறுமை குறித்து சவால்களையும் பொறுப்புகளையும், வளர்ந்த நாடுகள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். சர்வதேச அரங்கில், இது முன் வைக்கப்பட வேண்டும் என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். ஆசிய பசிபிக் மண்டலத்தில், இந்தியாவின் பங்கு, மண்டல பொருளாதார மேம்பாட்டில் தெற்காசியாவின் ஒருங்கிணைந்த முயற்சியில் இந்தியாவின் பங்கு, ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதில் இந்தியாவின் பங்கு, தீவிரவாதத்தை எதிர்கொள்ளத் தேவையான அணுகுமுறை குறித்துப் பிரதமர் விவாதித்தார். 


 
இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, வர்த்தகத் துறை செயலர் பிரிட்ஸ்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சிந்தனை மிகுந்த விரிவான கடிதத்தைப் பாராட்டியும் பிரதமர் நன்றி தெரிவித்தார். 
 
இந்தச் சந்திப்பின் போது வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத் துறை முதன்மைச் செயலர் நிர்பேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் மற்றும் மூத்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.