வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (19:05 IST)

ஆபாச படம் எடுத்து மிரட்டிய கள்ளக்காதலனை காரை ஏற்றிக் கொன்ற பெண்ணின் வாக்குமூலம்

ஆபாச படம் எடுத்து மிரட்டியதால், சினிமா பாணியில் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் காரை ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கள்ளக்காதலியை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
உன்சூர் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
 
மைசூர் மாவட்டம் உன்சூர் தாலுகா குப்பே கிராமத்தின் அருகே ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக, உன்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உன்சூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மல்லேஷ், சப்-இன்ஸ்பெக்டர் உதயரவி ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
 
அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உன்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், மைசூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ்கெரே, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமார் ஆகியோரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
 
இதுகுறித்து உன்சூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் பெங்களூர் ராஜாஜிநகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹேமந்த் குமார்(வயது 47) என்பதும், அவர் காரை ஏற்றிக் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஹேமந்த்குமார் செல்போனில் இருந்து யார், யாருக்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
 
அப்போது அவர் பெங்களூர் ராஜாஜிநகரை சேர்ந்த நபீசா(42) என்பவரின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உன்சூர் காவல்துறையினர் பெங்களூருக்கு சென்று நபீசாவை பிடித்து, உன்சூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் ஹேமந்த் குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
 
இதுகுறித்து அவர் காவல்துறையில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும், ஹேமந்த் குமாருக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நாங்கள் இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். அப்படி ஒரு முறை உல்லாசமாக இருந்தபோது, அதை ஹேமந்த் குமார் தனது செல்போனில் படம் பிடித்தார்.
 
இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மேலும் நான் அந்த படத்தை உடனடியாக அழித்து விடும்படி ஹேமந்த் குமாரிடம் வற்புறுத்தினேன். அந்த படத்தை அழித்து விட்டதாக ஹேமந்த் குமார் என்னிடம் கூறினார்.
 
ஆனால் அவர் அந்த படத்தை அழிக்காமல் தனது செல்போனிலேயே பதிவு செய்து வைத்து இருந்தார். இந்த நிலையில், எனது கணவருக்கு துரோகம் செய்வதாக எண்ணிய நான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமந்த் குமாருடனான கள்ளத்தொடர்பை துண்டித்துக் கொண்டேன்.
 
ஆனாலும், ஹேமந்த் குமார் தன்னுடன் பழைய மாதிரி பழக வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். இதற்கு நான் மறுத்துவிட்டேன். இதனால் அவர் என்னிடம் உல்லாசமாக இருந்த படத்தை காட்டி, ‘நான் சொல்லும்படி கேட்காவிட்டால் இந்த படத்தை இணையதளத்திலும், உனது கணவர் ‘பேஸ்புக்’கிலும் வெளியிட்டு விடுவேன்’ என்று என்னை மிரட்டினார்.
 
இதனால் பயந்த நான் ஹேமந்த் குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். கடந்த மாதம் 30 ஆம் தேதி மைசூர் டவுன் விஜயநகரில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்த ஹேமந்த் குமார் என்னையும் அங்கு வரும்படி அழைத்தார். இதையடுத்து நான் எனது காரை எடுத்துக் கொண்டு மைசூருக்கு சென்றேன்.
 
பின்னர் நாங்கள் இருவரும் உன்சூர் அருகே நாகரஹொழே வனப்பகுதியில் உள்ள ரெசார்ட் ஓட்டலில் அறை எடுத்து தங்கினோம். அங்கு நாங்கள் 2 பேரும் உல்லாசமாக இருந்தோம். பின்னர் 31 ஆம் தேதி அங்கிருந்து பெங்களூருக்கு திரும்பினோம்.
 
அப்போது உன்சூர் தாலுகா குப்பே கிராமத்தின் அருகே வந்தபோது, ஹேமந்த் குமார் காரை நிறுத்தி விட்டு, இயற்கை உபாதை கழிக்க சென்றார். அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நான், உடனடியாக காரை பின்னோக்கி ஓட்டி சென்று, ஹேமந்த் குமார் மீது ஏற்றி அவரை கொலை செய்தேன். பின்னர் அங்கிருந்து நான் காரை எடுத்துக் கொண்டு பெங்களூருக்கு வந்துவிட்டேன். ஆனால் காவல்துறையினர் என்னை எப்படியோ கண்டுபிடித்து விட்டனர் என்று அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.
 
இதைத்தொடர்ந்து, நபீசாவை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.