1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2015 (12:53 IST)

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக முதல்வரை சந்திக்க மறுத்த மோடி

மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க பிரதமர் மோடி மறுத்துள்ளார்.
 
கர்நாடகாவில், மேகதாது என்னும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
 
இதனால், தமிழக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும், கண்டிப்பாக மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறி வருகிறார்.
 
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வாங்குவதற்காக கர்நாடக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமர் மோடியை இன்று (22ஆம் தேதி) சந்திக்க போவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருந்தார். ஆனால், அவரை சந்திக்க பிரதமர் மோடி மறுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, கர்நாடக அரசுக் குழுக்களின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
 
மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக சித்தராமையா சந்திக்க மோடி மறுத்திருப்பது கர்நாடக அரசுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
 
இதற்கிடையே, வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் மோடியை சந்திக்கலாம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாகவும், அப்போது மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான அனைத்து விவரங்களையும் பிரதமரிடம் எடுத்து கூறி அனுமதி பெறப்போவதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.