வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 4 ஜூன் 2016 (10:05 IST)

மதுராவில் பெரும் வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு - 24 பேர் பலி; 100 பேர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் ‘ஆசாத் பாரத் விதிக் வைசாரிக் கிராந்தி சத்யாகிரஹி’ அமைப்பினர் நிகழ்த்திய வன்முறை மற்றும் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 24 பேர் பலியாகி உள்ளனர்.
 

 
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் ஜவஹர்பாத் பகுதியில் 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்கா உள்ளது. மாநில அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடத்திலுள்ள இந்த பூங்காவை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆசாத் பாரத் விதிக் வைசாரிக் கிராந்தி சத்யாகிரஹி’ என்ற அமைப்பினர் திடீரென சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
 
அப்போது இருந்து, இப்பூங்காவை மீட்குமாறு நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், காவல் துறையினரால் ‘சத்தியாகிரகிகள்’ அமைப்பினரை வெளியேற்ற முடியாமல் இருந்துள்ளது. இதனால், ஆக்கிரமிப்பு தொடர்பாக அண்மையில் மீண்டும் தொடரப்பட்ட பொது நல வழக்கில், பூங்கா ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றுமாறு போலீசாருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் ஜவஹர் பாத் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த சத்தியாகிரஹி அமைப்பைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்டவர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிது.
 
இதனால் காவல் துறையினர் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தடியடி நடத்தியுள்ளனர். அப்போதும் கலைந்து செல்லாத சத்தியாகிரஹி அமைப்பினர் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்து காவல் துறையினரை சுட்டதாகவும், கையெறிக் குண்டுகளை வீசியதாகவும் தெரிகிறது.
 
இதில், மதுரா நகர எஸ்.பி. முகுல் துவிவேதி, பரா காவல் நிலைய ஆய்வாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் சம்பவே இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும், சத்தியாகிரஹி அமைப்பினர் வீசிய கையெறிக் குண்டு, அவர்களின் கூடாரத்தில் இருந்த எரிவாயு சிலிண்டர் மீதே பட்டு வெடித்ததில், அதே அமைப்பைச் சேர்ந்த 11 பேரும் உடல்கருகி பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சத்தியகிரஹி அமைப்பைச் சேர்ந்த மேலும்11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.