1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 31 ஜனவரி 2015 (16:33 IST)

'பேடியை விட இல்மி அழகானவர்': முன்னாள் நீதிபதி கட்ஜூவின் கருத்தால் சர்ச்சை

பிரஸ் கவுன்சில் சேர்மனாக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தனது ட்விட்டரில் டெல்லி பாரதீய ஜனதா முதலமைச்சர் வேட்பாளர் கிரண் பேடியை விட அந்த கட்சியில் உள்ள சாஷியா இல்மி அழகானவர். அவரை டெல்லி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி இருந்தால் அந்த கட்சி டெல்லி தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
 
மற்றொரு கருத்தில், அழகான முகங்களுக்கு தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். என்னை போன்ற வாக்களிக்காத நபர்கள் கூட இல்மிக்கு ஓட்டு போட முன்வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
கட்ஜூவின் இந்த கருத்துக்கு ட்விட்டர் பக்கத்தில் கடுமையான கண்டன கருத்துகள் தெரிவிக்கபட்டு வருகிறது. அவரது கருத்து மிகவும் ஆபாசமாக இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது.
 
சர்ச்சையைத் தொடர்ந்து கட்ஜூ தனது கருத்துக்கு "உங்கள் அனைவரது பிரச்சினை என்னவென்று தெரியவில்லை. என்னைப் போன்ற வயதானவர்கள் அழகை ரசிக்கக் கூடாதா என்ன?
ஒரு அழாகான பூவை நாம் ரசிப்பதாக கூறும்போது, அதனை நாம் பறிக்க நினைக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. தோட்டத்தில் இருக்கும் பூவை தூரத்தில் இருந்து ரசிப்பதில் தவறில்லை. தோட்டத்துக்குள் அத்துமீறினால்தான் தவறு.
 
அதுபோலதான், நான் அந்த பெண்ணின் அழகை ரசிப்பதாகக் கூறுகிறேன். அவரை குறித்து தவறாக பேசவில்லை. உரிமை எடுத்துக்கொண்டும் நடக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
 
சாஷியா இல்மி சமீபத்தில்தான் பாரதீய ஜனதாவில் இணைந்தார். அதற்கு முன்பு அவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார். கடந்த மே மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.