1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 11 மார்ச் 2015 (14:12 IST)

நிலக்கரி ஊழல் வழக்கில் மன்மோகன் சிங் மீது சிறப்பு நீதிமன்றம் சம்மன்

நிலக்கரி ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உண்மை வெல்லும் என்று கூறியுள்ளார்.
 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது 10 ஆண்டு பதவி காலத்தில் கூடுதலாக நிலக்கரி இலாகாவையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் 2005ஆம் ஆண்டு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ தனி நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அண்மையில் மன்மோகன் சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
 
தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, முன்னாள் நிலக்கரிச் செயலாளர் பி.சி.பராக், ஹிண்டால்கோ நிறுவனத்தின் அதிகாரிகள் அமிதாப் மற்றும் டி.பட்டாச்சார்யா ஆகியோருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மன்மோகன் சிங் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் ஏப்ரல் 8ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உண்மை வெல்லும் என்று நம்புகிறேன், அனைத்து உண்மைகளை கொண்டு வழக்கை முன்னெடுத்து செல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கும். எவ்வித விசாரணைக்கும் வெளிப்படையாக பதிலளிக்க தயாராக உள்ளேன் என்பதையே இப்போதும் தெரிவிக்கிறேன். கண்டிப்பாக நான் வருத்தம் அடைந்துள்ளேன், ஆனால் இது எனது வாழ்க்கையில் ஒரு பகுதியாக உள்ளது என்று கூறினார்.
 
மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டதில் பாஜக தலைவர், காங்கிரஸ் கட்சியை தாக்கியுள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், பொருளாதார வல்லூனரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, காங்கிரஸ் கட்சியின் ஊழல் காரணமாகவே சம்மன் அனுப்பட்டுள்ளது என்று கூறினார்.