திருட்டு புகார்; மாணவிகளின் ஆடையை களையச் செய்த தலைமை ஆசிரியர்
மத்தியப் பிரதேச பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் மாணவிகளின் ஆடையை களையச் செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் 70 ரூபாய் பணம் காணாமல் போனது. உடனே அந்த மாணவி பணத்தை யாரோ திருடியுள்ளனர் என தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் அந்த மாணவியின் வகுப்பு மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் இரண்டு மாணவிகள் தான் எடுத்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் அவர்களை தனியாக சோதனை செய்துள்ளனர்.
ஆனால் அவர்களிடம் பணம் எதுவும் இல்லை. அவர்களும் நாங்கள் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் நீங்கள் தான் திருடியதாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மறுப்புத் தெரிவித்த மாணவிகளின் ஆடையைக் களைய செய்து சோதனை செய்துள்ளனர். தலைமை ஆசிரியர் கூறியதன் அடிப்படையில் அந்த மானவிகளின் தோழியை வைத்து ஆடையை களையச் செய்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கல்வித் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வித்துறை உறுதியளித்துள்ளது.