வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2015 (13:56 IST)

லலித் மோடி, வியாபம் ஊழல் சர்ச்சை: சில நிமிடங்களில் முடங்கியது மக்களவை

லலித் மோடி சர்ச்சை, வியாபம் ஊழல் விவகாரங்களால் மக்களவை இன்று காலை கூடிய சில நிமிடங்களிலேயே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
 

 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் அமளியால் முதல்நாளிலேயே மாநிலங்களவை முடங்கியது. இரண்டாவது நாளும் இருஅவைகளும் செயல்படவில்லை.
 
மூன்றாவது நாளான நேற்று (வியாழக்கிழமை) மக்களவை தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வியாபம் ஊழல், லலித் மோடி விவகாரங்களை எழுப்பினர்.
 
இந்த விவகாரங்கள் தொடர்பாக கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்கவில்லை.
 
இதைத் தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
 
வியாபம் ஊழலுக்கு பொறுப்பேற்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், லலித் மோடிக்கு உதவிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தின. அமளி அதிகமானதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் மக்களவை கூடியது.அப்போது காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் லலித் மோடி சர்ச்சை, வியாபம் ஊழல் குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்ட விவாதிக்க அனுமதி கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
 
ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அந்த நோட்டீஸை நிராகரித்தார். கேள்வி நேரம் தொடங்குவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர் அவை நடுவே சூழ்ந்தனர். கைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். கடந்த 2 நாட்களாக பிரதமருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அதே பதாகையை உயர்த்திக் காட்டினர். மற்றொருபுறம் தெலங்கானா மாநிலத்துக்கு தனி நீதிமன்றம் கோரி டிஆர்எஸ் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி சபாநாயகர் பலமுறை வலியுறுத்தினார். ஆனாலும், உறுப்பினர்கள் சமாதானம் அடையாததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
 
முன்னதாக நேற்று ராகுல் காந்தி கூறும்போது, "சுஷ்மா சுவராஜ் தவறு இழைத்துள்ளார். அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும். சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற வாய்ப்பேயில்லை" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே, மாநிலங்களவையிலும் லலித் மோடி, வியாபம் ஊழல் சர்ச்சை எதிரொலித்தது. அதன் காரணம் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.