உச்சநீதிமன்ற கேண்டீனில் சைவ உணவு மட்டுமே.. வழக்கறிஞர்கள் ஆவேசம்..!
நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து, ஒன்பது நாட்களுக்கு உச்சநீதிமன்ற கேண்டீனில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும், அது மட்டுமின்றி பூண்டு, வெங்காயம் இல்லாத உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற கேன்டீன் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவராத்திரி பண்டிகை 9 நாட்கள் கொண்டாடப்படும் நிலையில், உச்சநீதிமன்ற கேண்டீனில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், பூண்டு, வெங்காயம் கலந்த உணவு கூட வழங்கப்பட வேண்டாம் என வாய்மொழியாக கேண்டீன் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், இது குறித்து வழக்கறிஞர் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அசைவ உணவு வழங்கக் கூடாது என வாய்மொழி வழியாக உத்தரவிட்டு கட்டுப்பாடு விதித்தது அநீதி என்றும், ஒரு சிலரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
மேலும், நவராத்திரி உணவுடன் வழக்கமான உணவையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும், இவ்வாறான கட்டுப்பாடு ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்றும், ஒரு சிலருக்காக கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது என்றும் வழக்கறிஞர்கள் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளனர்.
Edited by Siva