விஷம் கலந்த டீ கொடுத்து தாய் கொலை; கூகிளில் ஐடியா தேடிய மகள் கைது!
கேரளாவில் சொத்துக்களுக்காக தாய்க்கு விஷம் வைத்து கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திரிச்சூர் பகுதியில் உள்ள கீழ்குளத்தை சேர்ந்தவர்கள் சந்திரன் – ருக்மணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் முதல் மகள் இந்துலேகாவிற்கு திருமணமாகியுள்ளது.
இந்துலேகாவின் கணவர் வெளிநாட்டில் உள்ளதால் அவர் தனது தாய், தந்தையரோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இந்துலேகாவின் தாய் மஞ்சள் காமாலை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு விஷம் அளிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தாயார் ருக்மணி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இந்துலேகே முன்னுக்கு பின் முரணாக பேசி வந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து இந்துலேகாவின் செல்போனை வாங்கி சோதனை செய்ததில் அதில் இணையத்தில் ஸ்லோ பாயிசன் அளித்து கொல்வது எப்படி? என இந்துலேகா தேடியிருந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இந்துலேகாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தனது தாய்க்கு தினமும் டீயில் குறைந்த அளவில் விஷம் கொடுத்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்துலேகாவின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் கணவருக்கு தெரியாமல் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை அடகு வைத்துள்ளார். அதை மீட்க பணம் இல்லாததால் தனது தாயிடம் அவருக்கு சொந்தமான வீட்டை விற்று பணம் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு தாயார் ருக்மணி மறுத்த நிலையில் அவர் இறந்துவிட்டால் நேரடியாக சொத்துகள் தன் கைக்கு வந்துவிடும் என திட்டமிட்டு இந்த பாதக செயலை இந்துலேகா செய்தது தெரிய வந்துள்ளது. இந்துலேகா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.