செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 7 மே 2024 (15:09 IST)

கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய மனு ஒத்திவைப்பு..! காரசார விவாதம்..! காவல் நீட்டிப்பு..!!

Aravind Kejriwal
டெல்லி முதல்வர் அரவிந்த் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீதான  விசாரணையை மே 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரம் என்பதால் இடைக்கால ஜாமீன் வழங்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
 
அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணையை தொடங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்த வாதங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இன்னும் நாங்கள் பதில் அளித்து முடிக்கவில்லை. தேர்தலைக் காரணம் காட்டி உடனடியாக ஜாமீன் கேட்பதை வானம் இடிந்து விடுவது போல சித்தரிக்கிறார்கள். எங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக வைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என  உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பாக கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
 
அதேசமயம், ஒட்டுமொத்த நாடும் தன்னை கவனித்துக் கொண்டிருப்பதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே இந்த வழக்கில் தான் எதுவும் குறிக்கிடாமல் இருந்து வருவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு, நாங்கள் உங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி விடுவிக்கிறோம் என்றால் நீங்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்க அனுமதிக்கப்படுவீர்கள். அதே நேரத்தில் உங்களது அரசு கடமைகளையும் செய்வீர்கள். அது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் தானே என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
 
மேலும், உங்களை விடுவித்தால் அதன் மூலமாக நீங்கள் அரசு வேலைகளை செய்வதை நாங்கள் விரும்பவில்லை என நீதிபதிகள் தங்கள் தரப்பு கருத்தாக கூறியுள்ளனர். அத்துடன், தேர்தல் நடக்கவில்லை என்றால் இடைக்கால நிவாரணம் வழங்கப்படாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இவ்வாறு காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீதான விசாரணையை மே 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே-20 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.