செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 21 மார்ச் 2016 (09:47 IST)

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்: சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது உடல்

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கே.விஜயகுமார் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.


 

 

 
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பிராந்தியத்தில் கடந்த 17 ஆம் தேதி இரவு 10.45 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
இதனால், சில இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. கார்கில் பகுதியில் 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள ஒரு ராணுவ சாவடியின் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன.
 
அப்போது, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 ராணுவ வீரர்கள் இதில் சிக்கினார்கள். இதனால், அவர்கள் பனிப்பாறைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.
 
இது குறித்து, தகவல் கிடைத்ததும் அங்கு ராணுவ மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் மற்றும் ரேடார் கருவியின் உதவியுடன் அவர்கள் இருவரையும் மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். 
 
அப்போது, சுஜித் என்ற வீரர் பனிக்கட்டி குவியல்களுக்கு அடியிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், மற்றொரு வீரரை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆனால் அவரை உயிருடன் மீட்க முடியவில்லை.
 
பனிக்கட்டி குவியலுக்குள் 12 அடி ஆழத்தில் புதைந்து கிடந்த அவரை மீட்புக்குழுவினர் பிணமாக மீட்டனர்.
 
பனிச்சரிவில் சிக்கி பலியான அந்த வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது பெயர் கே.விஜயகுமார் இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வல்லராமபுரத்தைச் சேர்ந்தவர்.
 
இவரது தந்தை கருத்தபாண்டி, தாயர் முத்துக்குட்டி அம்மாள். விஜயகுமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜேஷ்வரி, சுமதி என்ற இரண்டு தங்கைகள் உள்ளனர்.
 
விஜயகுமார் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். அவருடன் அதே வல்லராமபுரத்தைச் சேர்ந்த வெள்ளதுரை, ரமேஷ், ராஜா, மகேஷ் ஆகியோரும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரும் கார்கில் அருகே உள்ள கன்னா சவுக் என்ற இடத்தில் பணியாற்றி வந்தனர்.
 
சில தினங்களுக்கு முன்னர் விஜயகுமார் தவிர மற்ற 4 பேரும் சொந்த ஊரான வல்லராமபுரத்துக்கு வந்தனர். விஜயகுமார் மட்டும் வரவில்லை. இந்நிலையில் அவர் பனிச்சரிவில் சிக்கி உயிழிந்த செய்திமட்டும்தான் அந்த ஊருக்கு வந்துள்ளது.
 
விஜயகுமார் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
விஜயகுமாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ராணுவ அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, விஜயகுமாரின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நடைபெற உள்ளது.
 
காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் சியாச்சின் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.