வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (06:02 IST)

கர்நாடக அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்க நீதிமன்றம் தடை

கர்நாடக மாநில அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்க பெங்களூரூ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

 
கர்நாடகாவைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் செல்வராஜ் என்பவர் தலைமையில் சுமார் 34 வழக்கறிஞர்கள், பெங்களூரு நகர முதன்மை சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியுள்ளதாவது:
 
கர்நாடக மாநில அதிமுகவுக்கு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய, கட்சி தலைமை கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.
 
இதற்கு, தேர்தல் பொறுப்பாளர்களாக தமிழக அமைச்சர் ரமணா மற்றும் எம்.எல்.ஏ. மணிமாறன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
 
தேர்தல் பொறுப்பாளர்கள் கட்சி  தொண்டர்களிடம் ஆலோசனை செய்யவில்லை.  மாறாக, கர்நாடகா தலைமைக் கழக நிர்வாகிகள் கொடுத்த பட்டியலை எடுத்துச் சென்று புதிய நிர்வாகிகளை அறிவிக்க உள்ளனர்.
 
மேலும், கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் போது, தேர்தல் ஆணையம் கூறியுள்ள நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுக் குழு கூட்டப்படவில்லை.  அதில் மூன்றுக்கு இரண்டு பங்கு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
 
எனவே, கர்நாடக மாநில அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் தேர்தலுக்கு நிரந்தர தடை  விதிக்க வேண்டும், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.
 
இந்த மனு, முதன்மை நீதிபதி  சூரியவம்ஷி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, கர்நாடக மாநில அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய தடை விதித்தார். மேலும், அதிமுக கட்சிக்கு நியமன நிர்வாகிகள் தேர்வு செய்யக் கூடாது என்றும்  உத்தரவிட்டார்.
 
மேலும், தமிழக முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா, கர்நாடக மாநில அதிமுக செயலாளர்  புகழேந்தி, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாநில தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
கர்நாடகா அதிமுகவினர் நீதி மன்றம் சென்ற சம்பவம் அதிமுக தலைமையை கடும் கோபம் கொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது.