சிக்கன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்வதா? ராகுலுக்கு பாஜக கண்டனம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிக்கன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்று வருவதாக பாஜக குற்றச்சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தி இந்து கோவில்களுக்கு மட்டும் சென்று வருவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நேற்று அவர் பெங்களூரின் ராய்ச்சூர் பகுதியிலுள்ள தர்கா ஒன்றிற்கு சென்று வழிபட்டுள்ளார்.
இந்த நிலையில் ராகுல், ஜவாரி சிக்கன் என்ற அசைவ உணவகத்தில் சிக்கன் சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு சென்றதாக, பாஜக தலைவர் எடியூரப்பா விமர்சனம் செய்துள்ளார். ஒரு புறம் கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீன் சாப்பிட்டுவிட்டு தர்மஸ்தலா மன்ஜூனாதா கோவிலுக்கு செல்வதாகவும், இன்னொருபுறம் சிக்கன் சாப்பிட்டு விட்டு காங்கிரஸ் தலைவரே நரசிம்ம சாமி கோவிலுக்கு சென்றுள்ளதாகவும், இப்படி தொடர்ந்து அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு ஏன் இந்துக்கள் கோவிலுக்குள் செல்கிறார்கள் என்றும் எடியூரப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் எடியூரப்பாவின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.