செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 31 அக்டோபர் 2014 (16:39 IST)

'மோடி தன் சின்னப்புத்தியைக் காட்டிவிட்டார்': காங்கிரஸ் கடும் தாக்கு!

இந்திரா காந்தி நினைவு நாளில் அரசு சார்பில் மரியாதை செலுத்தாதது, மோடி மற்றும் பாஜக அரசின் சின்னப்புத்தியைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது.
 
சீக்கிய பாதுகாவலர்களால் 31-10-1984 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 30–வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
 
ஒவ்வொரு ஆண்டும் இந்திரா காந்தியின் நினைவு நாளன்று பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் டெல்லியில் உள்ள இந்திரா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். மாநில அரசுகளின் சார்பில் இன்று கொடுஞ்செயல் ஒழிப்பு உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளப்படும்.
 
ஆனால், இந்த ஆண்டு இந்திரா நினைவு நாளை மத்திய அரசு புறக்கணித்தது. இந்திரா நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சமாதியில் அரசு பதவியில் உள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகிய இருவர் மட்டும் இன்று அஞ்சலி செலுத்தினார்கள். பிரதமர் மோடியோ, மத்திய அமைச்சர்களோ இந்திரா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தவில்லை.
 
மோடியின் இந்த போக்குக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற மேல்சபை காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, ’இந்தச் செயல் நாட்டுக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையாகும். குறிப்பாக, இந்த நாட்டின் ஒற்றுமைக்காக உயிரை தந்த இந்திரா காந்தியை அவமதிப்பது என்பது சின்னப்புத்தித்தனமானது.
 
இத்தகைய செயலின் மூலம் மோடிக்கும், பாஜகவுக்கும் எத்தகைய எண்ணம் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்’ என்று கூறினார்.