கிராமங்களின் குறையை போக்க இந்திய ‘போஸ்ட் வங்கி’ சேவை
இந்திய போஸ்ட் வங்கி அடுத்த ஆண்டில் செயல்பாட்டுக்கு வருகிறது என்றும், தமிழகத்தில் முதல் வங்கி ஜார்ஜ்டவுன் தபால் அலுவலகத்தில் அமைகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தபால் துறை சேவையின் கீழ் ‘இந்திய போஸ்ட் பேமண்ட் பேங்க்’ (IPPB) என்Ru செயல்பட உள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் முதல்கட்டமாக 650 கிளைகளை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் வங்கி சேவைகள் அனைத்தும் கிடைப்பதற்கு என்னென்ன முறைகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தபால் அலுவலக உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
நாடு முழுவதும் ‘இந்திய போஸ்ட் பேமண்ட் பேங்க்’ அடுத்த ஆண்டில் தொடங்கப்பட உள்ளது. இது முற்றிலும் தபால் துறையின் கீழ் தான் செயல்படும். ஆனால் அது ஒரு தனி நிறுவனம் போல் இயங்கும். வங்கிகளில் கிடைக்கும் சேவைகள் அனைத்தும் இதிலும் கிடைக்கும்.
அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை இதில் சேமித்து வைக்கலாம். தபால் அலுவலகங்கள் கிராமப்புறங்களில் தான் அதிகம் இருக்கின்றன. பொதுவாக கிராமங்களில் வங்கிகள் குறைந்த அளவே இருக்கின்றன. அதை நிவர்த்தி செய்யும் வகையில் இந்திய போஸ்ட் வங்கி இருக்கும்.
தமிழகத்தில் சென்னை ஜார்ஜ்டவுன் இடத்தில் தபால் அலுவலகத்தில் முதல் வங்கி அமைய இருக்கிறது. இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.