வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (13:27 IST)

மாட்டுசாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது! – இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அதை கோமியத்தால் குணப்படுத்த முடியும் என்பதற்கு ஆதாரமில்லை என இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் படுக்கை வசதி பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சிலர் மாட்டு கோமியம் மற்றும் மாட்டு சாணத்தால் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் சிலர் வாரம் ஒருமுறை மாட்டுசாணாம் மற்றும் கோமியத்தை உடலில் பூசிக் கொண்டு யோகா செய்வதும், பின்னர் பால், வெண்ணையால் தங்களது உடலை சுத்தம் செய்து கொண்டும் இதன் மூலம் கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து எச்சரித்துள்ள இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் கூறும்போது “கொரொனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை மாட்டு சாணமோ, கோமியமோ வழங்கும் என்பதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் கிடையாது. இது முற்றிலும் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டது. இதனால் மக்களுக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவதுடன், விலங்கிடம் இருந்து பரவும் நோய்களும் மக்களுக்கு பரவும் அபாயம் உள்ளது” என்று எச்சரித்துள்ளார்.