புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (13:02 IST)

பனிக்காற்றில் மாயமான இந்திய விமானம்: 51 ஆண்டுகால மர்மம் விலகியது

இமாச்சல பிரதேசத்தில் 51 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன இந்திய விமானப்படையின் விமானம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

1968 பிப்ரவரி 7 அன்று பஞ்சாபின் சண்டிகர் நகரிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு பைலட் உட்பட 102 இராணுவ வீரர்களோடு பயணத்தை தொடங்கியது ஏஎன்12 ரக இந்திய இராணுவ விமானம். நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம் இமாச்சல மலைப் பிராந்தியத்தில் விழுந்து நொறுங்கியது. அதோடு மொத்த தொடர்புகளும் முடிந்து போனது.

காணாமல் போன விமானத்திற்கும், வீரர்களுக்கும் என்ன ஆனது என்பதை கண்டறிய பல முயற்சிகளை மேற்கொண்டது இந்திய ராணுவம். ஆனால் விமானம் எந்த இடத்தில் விழுந்தது என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு பிறகு வருடங்களும் உருண்டோடின.

2003ம் ஆண்டு டாக்கா மலையேற்ற குழு ஒன்று இமாச்சல பிரதேசத்தின் மலைப்பிராந்தியங்களில் பயணம் மேற்கொண்டிருந்த போது, ஒரு இராணுவ வீரரின் அடையாள அட்டை பனியிலிருந்து கிடைத்துள்ளது. அந்த அட்டை காணாமல் போன விமானத்தில் இருந்த ஒரு வீரருடையது என தெரிய வந்தது. அதை தொடர்ந்து அந்த பகுதிகளில் மீண்டும் தேட இந்திய விமானப்படை தயாரானது. அதற்கு பிறகு பல்வேறு முறை வெவ்வேறி இடங்களில் தேட தொடங்கினார்கள். ஒருசில சமயங்கள் சில வீரர்களின் உடல்கள் கிடைத்தன. ஆனால் விமானத்தை பற்றிய எந்த துருப்பும் கிடைக்கவில்லை.

இதுநாள் வரை ஐந்து வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்நிலை கடந்த ஆகஸ்டு 6ம் தேதி மீண்டும் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்ட தேடுதல் குழுவினர் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். விமானியின் முக கவசம், ப்ரொப்பலேட்டர் ப்ளேடுகள் மற்றும் விமானத்தின் இதர பாகங்கள் கிடைத்துள்ளன.

இதனால் அந்த பகுதியில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மீதமிருக்கும் 99 வீரர்களின் உடல்களும் இப்பகுதியில்தான் கிடக்கக்கூடும் என நம்பப்படுகிறது. விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது குறித்து இதன்மூலம் அறிந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.