இந்தியா காவிமயம்: எச்.ராஜா கொக்கரிப்பு!
குஜராத், இமாச்சலபிரதேசம் மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று இரு மாநிலங்களிலும் பெரும்பாண்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
குஜராத்தில் காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. பலத்த கூட்டணி, அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் என காங்கிரஸ் இந்த முறை பலம் வாய்ந்த நெருக்கடியை கொடுத்தது பாஜகவுக்கு. ஆனால் பாஜக குஜராத்தில் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
பாஜக குஜராத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும், ஆட்சியை தக்கவைக்கும் அளவுக்கு பெரும்பாண்மையை பெற்றுள்ளது. அதே போல இமாச்சலபிரதேசத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்க உள்ளது. அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை விட அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது பாஜக. அங்கும் பெரும்பாண்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது பாஜக.
இந்த இரண்டு மாநில சட்டசபை தேர்தல் வெற்றியின் மூலம் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 18-லிருந்து 19-ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா காவிமயம் என அவர் தனது முகநூல் கணக்கில் கூறியுள்ளார்.