ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (08:31 IST)

பரவும் புதிய கொரோனா; கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தடை! – மீண்டும் ஊரடங்கு விதிக்கும் மாநிலங்கள்!

லண்டனிலிருந்து பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் உள்ள நிலையில் இந்திய மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸுக்கே தற்போதுதான் மருந்து கண்டுபிடித்துள்ள நிலையில், லண்டனிலிருந்து வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமால் இருப்பதற்கான செயல்பாடுகளில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இன்று நள்ளிரவு முதல் ஜனவரி 5 வரை இரவு நேரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு வெளியாகியுள்ளது. புதிய கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய கொரோனா பரவல் காரணமாக தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து வேறு சில மாநிலங்களும் புத்தாண்டு தடை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. நடப்பு வருடம் கொரோனாவால் மோசமடைந்த சூழலில் எதிர்வரும் வருடம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் புது வருடத்திற்கு புதிய கொரோனா பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.