இந்தியாவுக்குள் நுழைந்தது கொடிய ஒமிக்ரான் - இருவருக்கு தொற்று உறுதி
கர்நாடகாவைச் சேர்ந்த 66 மற்றும் 46 வயதான 2 ஆண்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பரவலை தடுக்க பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் ஓமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த 66 மற்றும் 46 வயதான 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவர்கள். இதனால் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் விமானத்தில் உடன் பயணித்தவர்களை கண்டறிந்து சோதனை மேற்கொள்ளும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
டெல்டா கொரோனா வைரஸ் வகையை விட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது ஓமிக்ரான் என மத்திய அரசு தெரிவித்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. மேலும் மத்திய அரசு இந்தியாவில் ஒமிக்ரான் பரவியதால் மக்கள் அச்சமைடய வேண்டாம், விழிப்புணர்வுடன் அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் இதனை எதிர்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.