வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (15:07 IST)

பிப்ரவரி 1-ல் இடைக்கால பட்ஜெட் – உயருமா வருமானவரி உச்சவரம்பு ?

பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தனிநபர்களின் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சம் ஆக உள்ளது.  2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை .ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய் உள்ளவர்கள் 5% வரியும், ரூ.5-10 லட்சம் வருவாய் உள்ளவர்கள் 20% வரியும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய் உள்ளோர் 30% வரியும் செலுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இடைக்கால பட்ஜெட் இன்னும் இரண்டு நாளில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று அமையும் புதிய அரசே தாக்கல் செய்யும்.

வருமான வரி விலக்கு உச்ச வரம்பை கடந்த 4 ஆண்டுகளாகவே உயர்த்தப்படாமல்  உள்ளது தேர்தல் வர இருப்பதால் நடுத்தர வர்க்கத்தின் வாக்குகளைக் கணக்கில் வைத்து தனிநபர்களுக்கான வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுபோலவே வருமான வரி சதவீதத்திலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைக்கால பட்ஜெட் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக நிதியமைச்சரே பட்ஜெட் தாக்கல் செய்வார். ஆனால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா சென்றுள்ளதால் இடைக்கால நிதியமைச்சரான பியுஷ் கோயல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார்.