வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 10 ஏப்ரல் 2016 (06:56 IST)

வருமான வரித்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்:அமிதாப் பச்சன்

வருமான வரித்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன் என்றும் தான் சட்டத்தை மதித்து நடப்பவன் என்றும், பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.


 

 
பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத கருப்பு பணத்தை மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பெயரும் அடிபட்டது. எனவே, மராட்டிய அரசின் புலிகள் பாதுகாப்பு பிரசார தூதர் மற்றும் பாந்திரா குர்லா காம்ப்ளக்சை சர்வதேச நிதி மற்றும் சேவை மயமாக மாற்றுவதற்கான ஆலோசனை குழுவின் உறுப்பினர் ஆகிய பொறுப்பில் இருந்து அவரை நீக்குமாறு காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தியது.
 
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை நடிகர் அமிதாப் பச்சன் மறுத்தார்.
 
இது குறித்து அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
வருமான வரித்துறையும், அமலாக்க இயக்குனரகமும் எனக்கு அனுப்பிய நோட்டீசுகளுக்கு கவனத்துடன் நான் பதிலளித்திருக்கிறேன்.
 
நான் சட்டத்தை மதித்து நடப்பவன். பனாமா அறிக்கையில் வெளியானது படி, அந்த 4 நிறுவனங்களின் இயக்குனராக நான் பதவி வகிக்கவில்லை.
 
இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
 
மேற்படி, அந்த 4 நிறுவனங்களிலும் என்னுடைய பெயர் எப்படி இணைக்கப்பட்டது? என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 
புலிகள் பாதுகாப்பு பிரசார தூதர் பொறுப்பில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருப்பதை பத்திரிகைகளில் படித்தேன்.
 
என்னை இந்த பொறுப்புக்கு நியமித்தது மராட்டிய அரசின் தனி உரிமை. இதில், அரசு என்ன முடிவு எடுத்தாலும், புலிகள் பாதுகாப்பு பிரசாரம், போலியோ, தூய்மை இந்தியா திட்டம், குடும்பக்கட்டுப்பாடு உள்ளிட்ட சமூக காரணங்களுக்காக என்னுடைய தனிப்பட்ட திறனுடன் தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.