வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 19 மே 2014 (21:12 IST)

மோடியை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி; பிரச்சனையின் அடிப்படையில் ஆதரவு!

பாஜக ஆட்சியமைக்க யாருடைய ஆதரவும் தேவையில்லை. ஆனால், பிரச்சனை அடிப்படையில் ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்று மோடியை சந்திக்க சென்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. வரும் 21 ஆம் தேதி  மோடி பிரதமர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அவரை சந்தித்து வருகின்றனர்.
 
சீமாந்திராவில் தனித்து போட்டியிட்ட ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்குதேசம் - பாஜக கூட்டணி 17 இடங்களை பிடித்தது. தெலுங்கானாவில் ஒரு தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில், 9 எம்.பி.க்களுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லியில் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, மோடியின் ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதாக ஜெகன்மோகன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, "எங்கள் நிலைமையை மோடி புரிந்துகொள்வார் என்று நம்புகிறோம். அவருக்கு ஆட்சியமைக்க யாருடைய ஆதரவும் தேவையில்லை. ஆனால், பிரச்சனை அடிப்படையில் அவருடைய ஆட்சிக்கு, நாங்கள் ஆதரவு கொடுப்போம்" என்று கூறினார்.