செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (11:01 IST)

#SayItLikeNirmalaTai: கோக்குமாக்காய் பேசி வாங்கி கட்டிக்கொள்ளும் நிர்மலா சீதாராமன்!

நாட்டில் வெங்காய தட்டுப்பாடு இல்லை என பேசி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். 
 
வடமாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெங்காய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் நாட்டிற்குள் வெங்காயத்திற்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வரை கிலோ 60 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் தற்போது 200 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மத்திய அரசு வெங்காயத்தை துருக்கி முதலான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. என்றாலும் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் இந்தியா வருவதற்கு டிசம்பர் இறுதி வரை ஆகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்களவையில் வெங்காய விலை உயர்வு, தட்டுப்பாடு குறித்து எம்பிக்களின் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் வெங்காய தட்டுப்பாடு இல்லை.  டிசம்பர் 2 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 5,70,373 மெட்ரிக் டன்கள் வெங்காயம் கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்டார்.
 
நிர்மலாவின் இந்த பேச்சை கேட்டு காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, நீங்களும் வெங்காயம் சாப்பிடுகிறவர்தானே என ஆவேசமாக கேட்க அதற்கு நிர்மலாவோ வெங்காயமும் பூண்டும் கலக்காத உணவை உண்ணும் பரம்பரை தமது என பதில் அளித்தார். 
 
இந்த பதிலால் கடுப்பான இணையவாசிகள் டிவிட்டர் பக்கத்தில் #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கின் கீழ் நீங்கள் வெங்காயம் உண்ணாத பரம்பரை என்பதால் வெங்காய தட்டுப்பாடு இல்லையா என கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.