வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 20 பிப்ரவரி 2015 (16:40 IST)

பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நிதிஷ் குமார்

பீகார் முதலமைச்சராக பதவியேற்க உள்ள முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளராக இருந்த ஜித்தன்ராம் மாஞ்சி, கடந்த மே மாதம் 20ஆம் தேதி முதலமைச்சர் ஆனார். ஆனால் நிதிஷ் குமார் இப்போது முதலமைச்சர் பதவியை ஏற்க விரும்பினாலும், அவருக்கு மாஞ்சி வழி விட மறுத்துவிட்டதால் பீகாரில் அரசியல் குழப்ப நிலை உருவாகியது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த மாஞ்சி, நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திப்பதாக கூறியிருந்தார்.
 
இன்று பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் முதல்வர் மாஞ்சி தனது பதவியை ராஜினாமா செய்தார். மாஞ்சி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் கேசாரி நாத் திரிபாதியிடம் வழங்கினார். கடிதத்தில் ஒரு வரியில் மட்டும் ராஜினாமா சமர்பிக்கப்பட்டது. காலை 10 மணியளவில் கவர்னரை மாஞ்சி 15 நிமிடங்கள் சந்தித்து பேசியபோது ராஜினாமா கடிதத்தை சமர்பித்தார்.
 
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாஞ்சி, தனக்கும், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் கொலை மிரட்டல் வந்ததையடுத்து ராஜினாமா செய்ததாக கூறினார். இதனையடுத்து பீகார் சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்நிலையில் பீகார் முதலமைச்சராக பதவியேற்க உள்ள முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
 
செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், பாஜக பீகாரில் எங்களுடைய கட்சியை உடைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம்சாட்டினார். மேலும், பீகார் அரசியல் நெருக்கடிக்கு ஆதரவு தெரிவித்த சிவசேனாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். "பாஜக பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க முயற்சி செய்தது. ஆனால் தோல்வி அடைந்துவிட்டது.
 
நான் என்னுடைய தவறை உணர்ந்து கொண்டேன். நான் என்னுடைய மக்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பீகாரில் ஆட்சி அமைக்க நாங்கள் ஏற்கனவே எங்களுடைய பெரும்பான்மையை காட்டிவிட்டோம். கவர்னர் விரைவில் எங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.