1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Alagesan
Last Modified: புதன், 23 நவம்பர் 2016 (12:49 IST)

ரூபாய் நோட்டை வாங்க பிக் பஜார் வாங்க

24 ந்தேதி முதல் பிக் பஜாரில் டெபிட் கார்ட் மூலம் ரூ.2000ம் நோட்டுக்கள் பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 
 
இரண்டு வாரங்கள் கடந்த பிறகும் மக்கள் தங்களது அன்றாட செலவுகளுக்கு தேவையான பணத்துக்காக வங்கிகள், ஏ.டி.எம். மையங்களின் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி வருகின்றனர். பணத்துக்காக அங்கும், இங்குமாக அலையும் அவல நிலை தொடர்கிறது.
 
எந்த வங்கியிலும் பொதுமக்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க போதிய அளவுக்கு பணம் இல்லை. பணம் நிரப்பப்படாததால் சென்னையை பொறுத்தமட்டில் சுமார் 80 சதவீத ஏ.டி.எம்.கள் செயல்படாமல் முடங்கியே கிடக்கின்றன. பல ஏ.டி.எம்.கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஏ.டி.எம்.களை தேடியும் பெரும்பாலானவர்கள் படையெடுத்தனர். ஆனால், ஏ.டி.எம்.களும் கைகொடுக்கவில்லை. இது தேவைக்கு ஏற்ப பணம் எடுத்து செலவு செய்யும் மாத சம்பளக்காரர்களை அதிகளவில் பாதித்துள்ளது.
 
அடுத்த வாரம் 1ம் தேதி சம்பளத்தையும் ஏ.டி.எம்.மில் எடுக்க முடியாமல் போய் விட்டால் நிலைமையை சமாளிக்க முடியாமல் போய் விடும் என்ற பயம்  பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே, மாத சம்பளத்தை ரொக்கமாக தருமாறு தனியார் நிறுவன ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் நவம்பர் 24ம் தேதி முதல் பிக் பஜாரில் டெபிட் கார்ட் மூலம் ரூ.2000ம் நோட்டுக்களை பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஓரளவிற்கு பணத்தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி பிக் பஜாரிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்தியா முழுவதும் 266 பிக் பஜார் உள்ளது.