பதவி கிடைத்த சில மணி நேரத்தில் ராஜினாமா! – குலாம் நபி ஆசாத் செயலால் காங்கிரஸ் அதிர்ச்சி!
காங்கிரஸில் பதவி அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த பதவியை மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் தேசிய கட்சியான காங்கிரஸ் பலமான பின்னடைவை சந்தித்த நிலையில் மீண்டும் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸை நிலைப்படுத்த சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஜம்மு மாநில காங்கிரஸிற்கு பல்வேறு பதவிகளில் பலரும் நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் பிரச்சாரக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் அவர் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் மாநில அரசியல் விவகார குழுவில் இருந்து விலகியுள்ள அவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது வயது மூப்பின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.