”வீடியோ கால் வாங்க.. மஜா பண்ணலாம்?”; சபலத்தால் லட்சங்களை இழந்த அதிகாரி!
குஜராத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் தனது போனுக்கு வந்த நிர்வாண வீடியோ அழைப்பால் ரூ.17 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இந்தியாவில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது அவற்றில் ட்ரெண்டிங்கில் இருக்கும் மோசடி முறை நிர்வாண கால் அழைப்பு. இந்த மோசடியை மானத்திற்கு பயந்து வெளியே சொல்ல பலரும் தயங்குவதால் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
குஜராத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிக்கு வாட்ஸப்பில் மர்மமான பெண் ஒருவரிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அவரும் அந்த பெண்ணிடம் பேச, அந்த பெண் உல்லாசமாக இருக்கலாம் என சொல்லி வீடியோ கால் செய்துள்ளார்.
சிறிது நேர இன்பத்திற்கு மயங்கிய அந்த நபரும் வீடியோ காலில் வர, அதில் ஒரு பெண் நிர்வாணமாக தோன்றியுள்ளார். பின்னர் அந்த வீடியோவை பதிவு செய்து வைத்துக் கொண்டு அந்த பெண் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் பணம் தர வங்கி அதிகாரி ஒப்புக்கொள்ளவில்லை.
பின்னர் டெல்லி சைபர் க்ரைம் காவல் நிலையத்திலிருந்து பேசுவதாக வங்கி அதிகாரிக்கு போன் செய்த நபர் ஒருவர், அந்த பெண் புகார் அளித்துள்ளதாகவும் அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.16.50 லட்சம் பறித்துள்ளார்.
அதற்கு பின் அந்த வீடியோ யூட்யூப் சேனல் ஒன்றில் லீக் ஆகி விட்டதாகவும், அதை நீக்க வேண்டுமென்றால் யூட்யூப் சேனல் உரிமையாளருக்கு ரூ.1.30 லட்சம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். ஒவரும் தனது நண்பர் மூலமாக அந்த பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதற்குமேல் பணம் தர முடியாதென முடிவு செய்த அந்த அதிகாரி இதுகுறித்து குஜராத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். சிறிது நேர சபலத்தால் ஓய்வு பெற்ற ஊழியர் ரூ.17.80 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited By: Prasanth.K