மக்களவையில் நிறைவேறிய ஜி.எஸ்.டி மசோதா : அதிமுக வெளிநடப்பு
இன்று மக்களவையில் நடந்த ஓட்டெடுப்பின் மூலம் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டது. ஓட்டெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டு அதிமுக வெளிநடப்பு செய்தது.
மத்திய அரசு சமீபத்தில் தேசமெங்கும் பொதுவான ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியது. அதுகுறித்த மசோதாவை பற்றி நாடாளுமன்ற மக்களவையில் இன்று விவாதம் நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலங்களவையில் ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் பிரதமர் மோடி மசோதா குறித்து பேசினார்.
அதன்பின், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி. திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அதன்பிறகு, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஓட்டெடுப்பு அறிவித்தார். ஆனால், அந்த மசோதாவில் தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என கூறி அ.தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் 443 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்ததையடுத்து ஜி.எஸ்.டி மசோதா ஒருமனதாக நிறைவேறியது.