மகா கும்பமேளா: உத்தரபிரதேச அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறதா?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதன் மூலம் அம்மாநில அரசுக்கு இரண்டு லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற இடத்தில் மகா கும்பமேளா தொடங்கி இருக்கும் நிலையில், முதல் நாளில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமம் பகுதியில் நீராட வந்திருப்பதாக கூறப்படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சேரும் திரிவேணி சங்கமத்தில் இன்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருவதாகவும், இதற்கான முன்னேற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு சிறப்பாக செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கும்பமேளா மூலம் இரண்டு லட்சம் கோடி வருவாய் ஈட்டப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்பட வெளிநாடுகளில் இருந்தும், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 40 கோடி பக்தர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வந்து தங்கி செல்லும்போது, குறைந்தபட்சம் ஒருவர் ரூ.5000 செலவு செய்வார்கள் என்றும், அவ்வாறு செலவு செய்தால் உத்தரப்பிரதேச அரசின் வருவாய் இரண்டு லட்சம் கோடியாக இருக்கும் என்றும், ஒருவரது செலவு ரூ.10,000 என்றால் நான்கு லட்சம் கோடி வருவாயாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran