மாஸ்க் போட சொன்ன சக ஊழியை; இரும்பு கம்பியால் தாக்கிய பணியாளர்! – சிசிடிவி வீடியோவால் கைது!
ஆந்திர பிரதேசத்தில் சக ஊழியர் மாஸ்க் அணியாமல் வந்ததை சுட்டிக்காட்டிய ஊழியை தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் வெளியே வந்தாலே முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அரசு அலுவலகங்களில் முகக்கவசம் அணிவது, சானிட்டைசர் உபயோகிப்பது உள்ளிட்டவை கண்டிப்பாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திரா சுற்றுலா துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர் தனது சக பணியாளர் முகக்கவசம் அணியாமல் வந்ததை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலிடத்திற்கு புகார் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த முகக்கவசம் அணியாமல் வந்த ஊழியர் பெண் ஊழியரை சரமாரியாக அடித்துள்ளார். கையில் கிடைத்த இரும்பு கம்பியை கொண்டு பலமாக தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தாக்கிய ஊழியரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் பரவியுள்ள நிலையில் ஊழியரின் இந்த செயலை பலரும் கண்டித்துள்ளனர்.