வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 17 மார்ச் 2016 (14:46 IST)

ரூ. 10 லட்சம் வருமானம் இருந்தால் ஏப்ரல் 1 முதல் மானியம் ’கட்’

ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

 
இதன்படி ரூ. 10 லட்சம் வருமானம் ஈட்டுவோர், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சந்தை விலையில் மட்டுமே எரிவாயு சிலிண்டரை வாங்க முடியும். கடந்த ஜனவரி மாதம் முதலே இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்த மோடி அரசு, தற்போது ஏப்ரல் 1 முதல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவது உறுதி என்று கூறியுள்ளது.
 
ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த மானிய விலையிலான சிலிண்டர்களைப் பெறுவதற்கு எந்த விதமான வருமான உச்சவரம்பும் கிடையாது.
 
ஆனால், பல நேரங்களில் இந்த எண்ணிக்கையைக் குறைக்க முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசும்,கடந்த 2 ஆண்டுகளாக நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசும் தொடர்ந்து முயற்சித்து வந்தன. ஆனால் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அது உடனடியாக நடக்கவில்லை.
 
எனினும், பிரதமர் மோடி, பொதுமக்கள் தாங்களாகவே எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு பல வகையிலும் பிரச்சாரம் செய்து வந்தார். குறிப்பாக சிலிண்டர் முன்பதிவின் போது, ‘0’ அழுத்தச் சொல்லி, விவரம் தெரியாமல் பலர் ‘0’ வை அழுத்தி அவர்களை அறியாமலேயே எரிவாயு மானியத்தைப் பறிகொடுத்தனர்.
 
இந்நிலையில் எரிவாயு சிலிண்டருக்கு வருமான உச்சவரம்பை அமல்படுத்துவது என்று அடுத்தகட்டத்திற்கு மத்திய அரசு சென்றுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வருமான வரம்பிற்குள் மானிய விலை எரிவாயு சிலிண்டரை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க ஆரம்பித்துள்ளது.
 
குறிப்பாக யாரெல்லாம் ரூ. 10 லட்சம் வருமானம் ஈட்டுகிறார்கள் என்ற பட்டியலை வருமான வரித்துறை மூலம் சேகரித்து வருகிறது. இதுவரை 5 லட்சம் பேரை அடையாளமும் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இவர்களுக்கு எரிவாயு மானியம் ரத்தாகும் விவரம் எஸ்எம்எஸ் மூலம் படிப்படியாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரூ. 10 லட்சம் வருமானம் உடையோர் தங்களது சமையல் எரிவாயு முகவரை அணுகி அவர்கள் தரும் விண்ணப்பத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்துகொடுத்த பின், முறைப்படி அவர்களுக்கான மானியம் ரத்து செய்யப்படும்.