செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2016 (11:31 IST)

சிறைக்குச் செல்ல வேண்டியவர்களுக்கு வரிச் சலுகையா? - பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா

சிறைக்குச் செல்ல வேண்டியவர்களுக்கு வரிச் சலுகையா? - பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா

வரி ஏய்ப்புச் சட்டத்தின் கீழ் பல ஆண்டு காலம் சிறைக்குச் செல்ல வேண்டியவர்களுக்கு எதற்காக இப்படியொரு சலுகை? என்று பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் கூறுகையில், “பட்ஜெட் உரைகளில் ஆரவாரமான சொற்களும் கரவொலிக்கான அறிவிப்புகளுமாக இருக்கும். அதை வைத்து உண்மை பட்ஜெட்டை மதிப்பிட முடியாது. இந்த பட்ஜெட்டிலும் அப்படிப்பட்ட பகட்டுகள் நிறைய இருக்கின்றன.
 
அப்பட்டமாக தேசத்துரோகச் செயலில் ஈடுபடுகிறவர்களான வரி ஏய்ப்பாளர்களுக்கு அன்பான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
 
அவர்கள் தாங்கள் இதுவரை செலுத்தாத வரியில் 30 சதவீதத்தைச் செலுத்தினால் போதும், அதன் மீது ஒரு ஏழரை சதவீதம் வட்டி, மேலும் ஒரு ஏழரை சதவீதம் அபராத வட்டி மட்டுமே விதிக்கப்படும்; மொத்தம் 45 சதவீதத்தில் ‘முடித்துக்கொள்ளலாம்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
கஜானாவிற்கு வந்து சேர வேண்டிய 55 சதவீத வரி விட்டுத்தரப்படுகிறது. அப்படி 30 சதவீதத்தைச் செலுத்த முன்வந்தால், என்ன, ஏது, நதிமூலமோ, ரிஷிமூலமோ விசாரிக்கப்பட மாட்டாது என்றும் நிதியமைச்சர் உறுதியளித்திருக்கிறார்.
 
வரி ஏய்ப்புச் சட்டத்தின் கீழ் பல ஆண்டு காலம் சிறைக்குச் செல்ல வேண்டியவர்களுக்கு எதற்காக இப்படியொரு சலுகை? இந்த 45 சதவீதத்தை செலுத்தத் தவறினால் ‘கடுமையான நடவடிக்கை’ எடுக்கப்படும் என்று வேறு எச்சரிக்கப்பட்டிருக்கிறது!
 
கடந்த காலங்களிலும் இதுபோன்ற ‘கடுமையான எச்சரிக்கைகள்’ விடுக்கப்பட்டதுண்டு. அந்த எச்சரிக்கைகளின் கதி என்ன ஆனது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆக, இப்படிப்பட்ட சலுகைகளாலும் எச்சரிக்கைகளாலும் கூட, கடந்த காலம் போலவே இப்போதும், பதுக்கப்பட்ட வரிப்பணம் வந்துவிடாது. இப்படி அவர்களுக்கு சலுகையளிப்பது பொருளாதாரத்திற்கு ஆரோக்கியமானதும் அல்ல.
 
இந்த பட்ஜெட்டின் மற்றொரு மோசமான அம்சம், மறைமுக வரிச் சுமை அதிகரிக்கப்பட்டிருப்பதுதான். தேநீர்க் கடையில் பருகுகிற தேநீர் முதல், அன்றாடம் பயன்படுத்துகிற உணவுப் பொருள்கள், மனச்சோர்வு நீங்கச் செல்கிற திரைப்படத்திற்கு வசூலிக்கப்படும் வரி... என்று எளிய உழைப்பாளி மக்களிடமிருந்து வசூலிக்கப்படுவதுதான் மறைமுக வரி.
 
ஏற்கெனவே மறைமுக வரி, வரி வசூலில் 65 சதவீதம் வரையில் செலுத்துவது ஏழைகளும் எளிய உழைப்பாளிகளும்தான். அம்பானிக்கும் ஒரு தொழிலாளிக்கும் ஒரே விதமான மறைமுக வரிதான் என்று சமாதானம் சொல்வார்கள்.
 
ஆனால், அம்பானிகள் தேநீருக்குச் செலுத்துகிற வரி, அவர்களுடைய வருமானத்தோடு ஒப்பிட்டால் கொசுவுக்குச் சமம். தொழிலாளிக்கோ அது பெரும் சுமை. அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி, மருத்துவம் ஆகியவை சலுகைகள் அல்ல அவர்களது உரிமைகள் என்பதை அரசு உணருமா?” என்று தெரிவித்துள்ளார்.