செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 27 மே 2024 (16:40 IST)

விளையாட்டு அரங்கத்தில் தீ விபத்து.! 4 ஆண்டாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.? குஜராத் ஐகோர்ட் கேள்வி..!!

Gujarath Highcourt
மனித தவறால் ஏற்பட்ட விபத்தில் அப்பாவி குழந்தைகள் பலியாகி விட்டதாக ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும் 4 ஆண்டாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. 
 
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் சிறார், பெரியவர்களுக்கான விளையாட்டு மையம் செயல்பட்டது. அங்கு நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் மாநகராட்சிகளின் வழக்கறிஞர்கள் ஆஜராகும்படி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நகராட்சி நிர்வாகத்திற்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரேன் வைஷ்ணவ், தேவன் எம்-தேசாய் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
 
ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் தீ விபத்து நடைபெறும் வரை 4 ஆண்டாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முறையான பராமரிப்பு இல்லாத விளையாட்டு அரங்கத்தை செயல்பட அனுமதித்தது ஏன்? என்றும் மனித தவறால் ஏற்பட்ட விபத்தில் அப்பாவி குழந்தைகள் பலியாகி விட்டனர் என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

 
விளையாட்டு மைதானம் இரண்டரை ஆண்டுகளாக முறையான அனுமதியின்றி இயங்கி வருவதில் மாநில அரசு கண்மூடித்தனமாக இருக்கிறது என்றே நாங்கள் கருதுகிறோம் என்றும் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.