இந்தியாவில் தொழில் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.. மோடியை வாழ்த்திய எலான் மஸ்க் பதிவு..!
நாளை மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க இருக்கும் மோடிக்கு உலகின் முன்னணி தொழில் அதிபர் ஆன எலான் மஸ்க் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இந்தியாவில் தொழில் செய்ய ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை நடைபெற உள்ளது.
இதனை அடுத்து மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்க இருக்கும் நிலையில் பல்வேறு உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது உலகின் முன்னணி தொழில் அதிபர் எலான் மஸ்க் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என்றும் இந்தியாவில் எனது நிறுவனங்கள் உற்சாகமாக பணிகளை செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Edited by Mahendran