1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : ஞாயிறு, 18 மே 2014 (07:43 IST)

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்ததால் தான் தோற்றோம் - மாயாவதி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்த காரணத்தால் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைய நேரிட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
Mayawati - Madhya Pradesh
மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெறவில்லை. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 
 
இந்நிலையில் மாயாவதி லக்னௌவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தவறான கொள்கைகளால் நாட்டு மக்கள் கடும் கோபமடைந்திருந்தனர். அந்தக் கூட்டணியின் ஆட்சிக்கு ஆதரவு அளித்த கட்சிகள் அனைத்தும் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளன. இதன் காரணமாகதான் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளிலும், தேர்தல் வியூகங்களிலும் எந்தவிதத் தவறுமில்லை. எங்கள் கட்சியின் தலித் சமுதாய வாக்குகள் பிரியவில்லை. அப்படியேதான் உள்ளன.

இந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட எங்கள் கட்சி வெற்றி பெறாததற்கு பாஜக, காங்கிரஸ், சமாஜவாதி மற்றும் பிற கட்சிகளின் திட்டமிட்ட சதிதான் காரணம்.
 
உத்தரப் பிரதேசத்தில் பாஜக மற்றும் பிற கட்சிகளின் தவறான தேர்தல் பிரசாரத்தின் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தினர், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், மேல் ஜாதியினர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதன் காரணமாகதான் வாக்குகள் பிரிந்துள்ளன.
 
பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவின் மதவெறியைத் தூண்டும் வகையிலான பேச்சுக்கள் எங்கள் கட்சியில் உள்ள மேல் ஜாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பெரும்பான்மையான வாக்குகளை பாஜகவுக்கு கொண்டு சென்றுவிட்டது.
 
காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சிகளின் பிரசார சூழ்ச்சியால் முஸ்லிம் வாக்குகள் சமாஜவாதி கட்சிக்கு சென்றுவிட்டது. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. குழப்பத்தில் வாக்களித்துள்ள முஸ்லிம் மக்கள் அதற்கு பின்னர் வருந்துவார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு 42 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
 
மீதமுள்ள 58 சதவீத வாக்குகளை அளித்துள்ள மக்கள் பாஜகவை நிராகரித்துள்ளனர்.
 
பாஜக அளித்துள்ள பெரிய வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாது. எங்கள் கட்சியின் தேசிய ஆலோசனைக் கூட்டம் மே 20ஆம் தேதி கூடும் என்றார் மாயாவதி.