பணம் எடுக்க அழியாத மை வேண்டாம்: தேர்தல் ஆணையம் எதிர்ப்பு!
பணம் எடுக்க அழியாத மை வேண்டாம்: தேர்தல் ஆணையம் எதிர்ப்பு!
வங்கிகளில் ஒருவர் பலமுறை பணம் எடுப்பதை தடுக்க கை விரலில் மை வைக்கப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறினார். இதன் படி வங்கியில் பணம் எடுக்க வருபவர்களுக்கு மை வைக்கப்பட்டு வருகிறது.
தேர்தலின் போது ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு வைக்கப்படும் அழியாத மை வங்கியில் தங்கள் பணத்தை எடுக்க வரும் பொதுமக்களுக்கு வைப்பது தவறு என பலரும் எதிர்த்து வந்தனர். நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில் இடைத்தேர்தல் நடக்க உள்ள சூழலில் வங்கிகளில் மை வைப்பது தேர்தல் வாக்குப்பதிவில் தேவையில்லாத குழப்பத்தை உருவாக்கும் என கூறியிருந்தார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி வங்கிகளில் மாற்றி இடது கை விரலில் மை வைத்தால் அவர்கள் ஓட்டு போட முடியாது என கூறினார்.
பல மாநிலங்களில் நாளை வாக்குபதிவு நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் நிதி அமைச்சகத்துக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், வங்கிகளில் அழியாத மை பயன்படுத்த வேண்டாம். தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு மை வைப்பது வழக்கமாக உள்ளது.
பல மாநில தேர்தல் நடக்க உள்ளதால் இது குழப்பத்தை ஏற்படுத்தும். தேர்தலில் தனித்துவம் வாய்ந்த அம்சங்களில் மை வைப்பது ஒன்றாகும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.