1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2016 (10:28 IST)

மொய்ப்பணம் ரூ.11 லட்சத்து 25 ஆயிரத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கிய தம்பதி

மொய்ப்பணத்தை வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கிய தம்பதி

தங்கள் திருமணத்திற்கு கிடைத்த ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மொய்ப்பணத்தை வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு புதுமண தம்பதியினர் வழங்கியுள்ளனர்.


 


தானேவை சேர்ந்த தேவேந்திரா - ரோஷினி ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம்  நடந்தது.
 
அவர்கள் தங்கள் திருமணத்திற்கு முன்னரே வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தனர்.
 
இந்தநிலையில் மகாராஷ்டிராவில், பல்வேறு பகுதிகளில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தேவேந்திரா மற்றும் ரோஷினியை மிகவும் கவலையில் ஆழ்த்தியது.
 
இந்தநிலையில் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் தரும் மொய்ப்பணத்தை ஏன் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கக்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். 
 
இவர்களின் இந்த முடிவை அவர்கள் பெற்றோர்களும் சம்மதித்தனர். திருமண விழாவில் புதுமணத்தம்பதியின் நல்ல செயலை ஊக்குவிக்கும் வகையில் உறவினர்களும், நண்பர்களும் மொய்ப்பணத்தை சற்று அதிகமாகவே கொடுத்தனர்.
 
மணப்பெண்ணின் தந்தை மட்டும் விவசாயிகள் நிவாரண நிதிக்கு தனிநபராக ரூ.1 லட்சம் கொடுத்தார்.


 

 
மேலும் திருமண விழாவில் கலந்துகொண்ட வாஷி ஏபிஎம்சி வியாபாரிகள் 45 பேர் மொத்தமாக சேர்த்து ரூ.9 லட்சம் கொடுத்தனர்.
 
இத்துடன் மணப்பெண், மணமகன் வீட்டார், நண்பர்கள் வழங்கியது எல்லாம் சேர்த்து ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் வரை கிடைத்தது.
 
இந்த தொகையை அவர்கள் தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கினர்.