1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 20 பிப்ரவரி 2015 (15:47 IST)

தூர்தர்ஷன் உலகக் கோப்பை போட்டிகளை தொடர்ந்து ஒளிபரப்பலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் உலகக் கோப்பை போட்டிகளை தொடர்ந்து ஒளிபரப்ப அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
தூர்தர்ஷன் உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்புவதால், ஒளிபரப்பு உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு வருமான இழப்பு ஏற்படுவதாகவும், இதற்கு தடை விதிக்கக் கோரியும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

 
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேபிள் ஆபரேட்டர் மூலம் போட்டிகளை ஒளிபரப்பத் தடை விதித்தனர். இதனை எதிர்த்து பிரசார் பாரதி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.
 
இந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தூர்தர்ஷன் கேபிள் ஆபரேட்டர் மூலம், போட்டிகளை ஒளிபரப்பினால் வருமான இழப்பு ஏற்படுவதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இதற்கு நீதிபதிகள், தற்போதைய சூழலில் முடிவுகள் எடுத்தால் போட்டிகள் ஒளிபரப்புவதில் தடை ஏற்படும் என்றும் தனியார் சேனல்களும், தூர்தர்ஷனும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுக்குமாறும் கூறினர்.
 
மேலும், விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கான புதிய சேனல் தொடங்குவது குறித்து பரிசீலணை செய்து பதில் அளிக்குமாறு பிரசார் பாரதிக்கு உத்தரவிட்டனர்.
 
நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது புதிய சேனலை உருவாக்க முடியாது என்று பிரசார் பாரதி பதில் அளித்தது. விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. 
 
இந்நிலையில் இன்று உலக கோப்பை போட்டிகளை தூர்தர்ஷன் கட்டணமின்றி ஒளிபரப்ப அனுமதியளித்தும், ஸ்டார் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம், வரும் உலகக் கோப்பை போட்டிகளை தூர்தர்ஷனிலும் கண்டுகளிக்க முடியும்.